மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேராசிரியரைக் கைது செய்யக் கோரி மாணவர்கள் ஊர்வலம்
கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக அக்கல்லூரியின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டார் .
கரூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரத்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் இளங்கோவன் . இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம், இவர் தவறான முறையில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது . இவரின் பாலியல் சீண்டல்கள் கல்லூரியின் வகுப்பறையிலே தொடர்ந்த வண்ணம் இருந்ததால், மாணவ மாணவிகள் உள்பட அனைவரும் இளங்கோவன் குறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.
கடந்த 21ம் தேதி கல்லூரி முதல்வரிடம் புகார் மனு கொடுத்த போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் . ஆனால் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் இளங்கோவன் மீது எடுக்கப்படவில்லை. சம்மந்தப்பட்ட பேராசிரியர் இன்று கல்லூரிக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 70 பேர் வகுப்பைப் புறக்கணித்து விட்டு, காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க ஊர்வலமாகச் சென்றனர். இதனால் கரூர் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் குமாரராஜா "தேர்தல் நேரம் என்பதால் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை" எனக் கூறி புகார் மனுவைப் பெற்று மாணவ மாணவிகளைத் திருப்பி அனுப்பினார் . புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், இளங்கோவனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாணவ, மாணவிகள் ஊர்வலமாகச் சென்ற சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது