தவானின் காப்பான் ஆட்டம்... - சென்னைக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி

ஐபிஎல் 12-வது சீசனின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் டாஸை வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆர்.சி.பிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களம்கண்டது சிஎஸ்கே. அதேநேரம், டெல்லி அணியில் ஒரு மாற்றமாகக் கடந்த போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்டுக்குப் பதிலாக அமித் மிஸ்ரா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.

முதல் இன்னிங்ஸை துவக்கிய டெல்லி அணிக்கு பிரித்திவி ஷா - தவான் என ஜூனியர் சீனியர் காம்போ ஓப்பனிங் கொடுத்தது. கடந்த ஆட்டத்தில் பிரித்திவி ஷா விரைவாக வெளியேறியதால் இந்த முறை பொறுமையாக தொடங்கினர். சிறிது நேரம் தான் தாக்குபிடித்தாலும் குறைந்த பந்துகளில் விரைவாக ரன்கள் சேர்த்தார். 16 பந்துகளை பிடித்த அவர் 5 பவுண்டர்களுடன் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரை தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, அதன்பின் வந்த ரிஷப் பான்ட் இந்த ஆட்டத்தில் ஜொலிக்க தவறினார்.

25 ரன்களில் அவர் வெளியேற அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொதப்பினர். அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகினர். இருப்பினும் மறுமுனையில் ஓப்பனிங் இறங்கிய தவான் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடினார். பொறுப்பாக ஆடிய அவர், அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்தபோது அவுட் ஆனார். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணி தரப்பில் பிராவோ அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

More News >>