வாட்சன் அதிரடி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2ஆவது வெற்றி ...
By Gokulakannan.D
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.பிரித்வி ஷா அதிக நேரம் தாக்கு பிடிக்கவில்லை எனினும் 16 பந்துகளில் 5 பவுண்டர்களுடன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் களமிறங்கிய தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . ஸ்ரெயாஸ் ஐயர் 18 ரன்களிலும், ரிஷப் பன்ட் 15 ரன்களிலும் கோலின் இங்க்ரம் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து ஆடிய ஷிகர் தவான் 51 ரன்கள் குவித்திருந்த நிலையில், ப்ராவோ பந்து வீச்சில் தாகுரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் 147 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு களமிறங்கினர். ராயுடு, 5 ரன்களில் இஷாந்த சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, வாட்சன் கூட்டணி நிதானமாக ஆடி ரன் சேர்ந்தது. வாட்சன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையிலும் , ரெய்னா 16பந்துகளில் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ், தோனி ஜோடி டெல்லி அணியின் பந்து வீச்சைத் சிதறடித்தனர். தோனி 35 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடி தந்தார் . இதன் மூலம் சென்னை அணி 19.4 ஓவரிலே 150 ரன்கள் எடுத்து டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது . சிறப்பாக விளையாடிய வாட்சனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2ஆவது வெற்றியை பதிவு செய்தது .