குக்கர் சின்னம் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு டிடிவி தினகரனுக்கு சாதகமா பின்னடைவா
குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், அமமுக வேட்பாளர்கள் சுயேச்சைகளாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது டிடிவி தினகரனுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்துமா? அல்லது சாதித்துக் காட்டி எழுச்சி பெறுவாரா? என்ற கேள்விகளை, எழுப்பியுள்ளது.
அமமுக வேட்பாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் பொது சின்னம் வழங்க பரிந்துரைத்துள்ளதில் டிடிவி தினகரனுக்குப் பாதி வெற்றியே கிடைத்துள்ளது எனலாம். இருப்பினும், அனைவரும் சுயேச்சை வேட்பாளராகவே கருதப்படுவார்கள் என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், தேர்தலின் போதும், தேர்தலுக்கு பிறகும் பல நடைமுறை சிக்கல்களை அமமுக சந்திக்கும் சூழல் ஏறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஒரே சின்னத்தைப் பெறுவதால், வாக்களிக்கும் போது சின்னத்தால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கும் சாதகமான சூழலும் தினகரன் தரப்புக்கு உருவாகியுள்ளது.
ஆனால், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் 29-ம் தேதி மாலையில்தான் அமமுக வேட்பாளர்களுக்குரிய சின்னம் ஒதுக்கப்படும். இதற்குப்பிறகு, தேர்தலுக்கு 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் வாக்காளர்களிடம் சின்னத்தை கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயம் அமமுகவுக்கு உள்ளது.
இதில், வேட்புமனு பரிசீலனை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளிலும் அனைத்து சுயேச்சை வேட்பாளர்களுக்குரிய விதிகளே அமமுக வேட்பாளர்களுக்கும் பின்பற்றப்படும் எனத் தெரிகிறது.
மின்னணு வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர்கள், சின்னம் முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் வேட்பாளர்கள், பின்னர் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்கள் என வரிசைப்படி இடம் பெறும். அதற்கு பிறகே சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள், சின்னம் இடம்பெறும். இவை, அனைத்துமே வேட்பாளர் பெயர்களின் அகர வரிசைப்படி தான் வாக்கு இயந்திரத்தில் இடம்பெறும்.
இதன் அடிப்படியில், அமமுக வேட்பாளர்களுக்குக் கடைசி வரிசையிலே இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கும். வேட்பாளர்களுக்குச் செலவு உச்சவரம்பு இருந்தாலும், கட்சிகளுக்கு தேர்தல் செலவுகளுக்கான உச்ச வரம்பு எதையும் தேர்தல் ஆணையை விதிகள் குறிப்பிடவில்லை. அமமுக, கட்சியாகப் பதிவு செய்யவில்லை என்பதால், தொலைக்காட்சி, பத்திரிகை விளம்பரங்களைக் கட்சி சார்பில் மேற்கொள்ள முடியாது. இதே நேரத்தில், அதிமுக, திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவிட்டு, கட்சியையும் சின்னத்தையும் பிரபலப்படுத்த முடியும்.
நட்சத்திர பேச்சாளர்கள் எனக் குறிப்பிட்டு யாரும் அம்முகவுக்காக பரப்புரை மேற்கொள்ள முடியாது. பரப்புரை செலவுகள் அனைத்தும் அந்தந்த வேட்பாளர்களின் செலவுக் கணக்கிலேயே வரும். வெற்றி பெறும் அமமுக வேட்பாளர்கள் அனைவரும் சுயேச்சைகளாகவே கருதப்படுவர். கட்சி பதிவு செய்யப்படாததால் வெற்றி பெறுபவர்கள் தேர்தலுக்கு பின் கட்சி மாறினாலும் கட்சித் தாவல் தடை சட்டம் பாயாது.
அமமுக வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுவதில் இவ்வளவு நடைமுறைச் சிக்கல்கள் உள்ள நிலையில், இதையெல்லாம் பின்தள்ளி டிடிவி சாதித்துக் காட்டுவாரா ? என்பது தான் கேள்வியாக உள்ளது.