சூப்பர் டீலக்ஸ்.. ஐரா.. மட்டுமில்ல இன்னும் நிறைய பெரிய படங்கள் இருக்கு. வீக் எண்ட் மூவி லிஸ்ட்
நமக்குப் பிடித்த நடிகரின் படத்துக்காக காத்திருப்பதே ஒரு தனி சுகம் தான். ஆனால் பட ரிலீஸ் குறித்த உறுதியான தகவல் கிடைத்தாலே கொண்டாட தொடங்கிவிடுவோம். கடந்த இரண்டு வாரங்களாக பெரியதாக எந்தப் படமும் வெளியாகவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இந்த வாரம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் வெளியாக இருக்கிறது. அது என்னென்ன பட்னக்கள் என்பது குறித்த சின்ன அறிமுகம் இதோ...
லூசிஃபர் (மலையாளம்):
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்கிற கேள்வியே ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கேள்வி. பரபரக்கும் அரசியல் சூழலுக்கு நடுவே, அரசியல் சார்ந்த ஒரு படம் தான் லூசிஃபர். மோகன்லால் லீட் ரோலில் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பது ப்ரித்விராஜ். படத்தின் எதிர்பார்ப்புக்கு காரணமும் நடிகர் ப்ரித்விராஜ் தான். நடிகராக தன்னுடைய திறமையை நிரூபித்தவர், இயக்குநராகவும் தன்னை நிரூபிக்கவிருக்கிறார். படத்துக்கு கதை முரளி கோபி எழுதியுள்ளார். மஞ்சுவாரியர், இந்திரஜித், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பொலிட்டிகல் த்ரில்லரான இப்படம் நாளை, மார்ச் 28ல் வெளியாகிறது. அதுவும் இந்தியா முழுவதும் 1500 திரைகளில் வெளியாக இருப்பது கூடுதல் தகவல்.
ஐரா (தமிழ்):
நாளை வெளியாக இருக்கும் மற்றுமொரு படம் ஐரா. குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ளார். சமீபமாகவே நாயகி மையமான படங்களில் கவனம் செலுத்திவருகிறார் நயன். இந்த வரிசையில் இப்படமும் நயனுக்கு மிக முக்கியமான படமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் ‘மேகதூதம்’, ‘காரிகா’அப்படிங்கிற இரண்டு பாடலும் சரி, பட டிரெய்லரும் சரி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாகியிருக்கிறது. தவிர, நயன் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் இது. இதில் ஒரு நயன் பத்திரிகையாளராகவும், மற்றொரு நயன் டஸ்கி ஸ்கின் கிராமத்துப் பெண்ணாகவும் வருகிறார். ஒரு நயனின் போஷன் முழுவதும் கருப்புவெள்ளையில் படமாகியிருக்கிறார்கள். டஸ்கி ஸ்கின் நயனுக்கு ஏற்படும் பிரச்னைக்கு, மற்றொரு நயன் எதிரிகளை பழிவாங்கும் படமே இந்த ஐரா. இப்படமும் நாளை, மார்ச் 28ல் ரிலீஸ்.
லட்சுமி என்.டி.ஆர். (தெலுங்கு):
இந்த வார வெள்ளி, மார்ச் 29ல் வெளியாக இருக்கும் தெலுங்கு திரைப்படம் லட்சுமி என்.டி.ஆர். தெலுங்கு நடிகரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர். பயோபிக் தான் இந்தப் படம். சமீபத்தில் தானே என்.டி.ஆர்.மகாநாயகுடு, என்.டி.ஆர்.கதாநாயகுடு என்கிற இரண்டு பயோபிக் வெளியானது என்று நீங்கள் கேட்கலாம். அவ்விரண்டு படங்களும் கம்பெனி இயக்குநரை வைத்து, என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா தயாரித்த படம். அவ்விரண்டு படங்களிலுமே என்.டி.ஆரின் புகழ் மட்டுமே இருக்கும். இந்நிலையில் என்.டி.ஆரின் வீழ்ச்சி தருணம், அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், அரசியலில் என்.டி.ஆர். செய்த விஷயங்கள் உள்ளிட்டவற்றை பேசுகிறது இந்த லட்சுமி என்.டி.ஆர். சர்ச்சை நாயகன் ராம் கோபால் வர்மா இயக்கியிருக்கும் இந்தப் படம், முதலில் வெளியாகாது என்றே சொல்லப்பட்டது. ஒருவழியாக வெளியீட்டு தேதியும் உறுதியாகியிருக்கிறது. மற்ற இரண்டு என்.டி.ஆர். பயோபிக்கையும் பார்த்தவர்கள், தவறாமல் இந்தப் படத்தையும் பார்த்துவிடுங்கள்!
சூப்பர் டீலக்ஸ் (தமிழ்):
ரொம்பவும் எதிர்பார்த்த படம். ரொம்பவும் எதிர்பார்த்த இயக்குநரிடமிருந்து எட்டு வருடங்கள் கழித்து வரவிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். தேசிய விருது இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். இவரின் ஆரண்யகாண்டம் படம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது அனைவருக்கும் நினைவிருக்கும். அடுத்த நகர்வாக சூப்பர் டீலக்ஸ் படத்தோடு வருகை புரிந்திருக்கிறார் தியாகராஜா. விஜய்சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. சமீபத்தில் வெளியாகி வைரலான டிரெய்லரே படத்துக்கான சாம்பிள். 2 மணிநேரம் 56 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், எந்த கட்டும் இல்லாமல் ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. மார்ச் 29 தேதியான வரும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகுது. டிரெய்லரிலேயே அதிரடிச்சு அதகளப்படுத்தினாங்க.... படத்தில் என்ன பண்ண காத்திருக்காங்களோ..!