காங்கிரஸ் ஆட்சி வந்தால் ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள் ஸ்டாலின் புகழாரம்

5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும், காங்கிரஸ் அறிவித்திருக்கும் திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் கூறியதாவது, ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழைகளுக்கும் மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் குறைந்தபட்ச ஊதிய உறுதித் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் திட்டத்தை திமுக சார்பில் மனமார வரவேற்கிறேன்.

விவசாயக் கடன் தள்ளுபடி செய்வோம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்பு அறிவித்த போதும் பாஜகவினர் இதே போன்று விஷமப் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திமுகவும் பங்கேற்றிருந்த நேரத்தில் 72 ஆயிரம் கோடி விவசாயக் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

ஆகவே, ஏழைகளுக்கான இந்த குறைந்த பட்ச ஊதிய உறுதித் திட்டத்திற்கான நிதி ஆதாரத்தைத் திரட்டி, திமுக - காங்கிரஸ் கூட்டணியால் வெற்றிகரமாக நிறைவேற்றிக்காட்டிட முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. முதன்முறையாக இந்தியாவில் கொண்டு வரப்படும் இந்தத் திட்டத்திற்கு திமுக இதயபூர்வமான ஆதரவினைத் தெரிவித்து, ஜூன் மூன்றாம் தேதிக்குப் பிறகு ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள் என்ற நிலை திமுக - காங்கிரஸ் கூட்டணியால் உருவாகும்' என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

More News >>