ஏப்.18-ல் திருப்பரங்குன்றம், அர வாங்குறிச்சி, ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் இல்லை - திமுக மனு தள்ளுபடி
மக்களவைத் தேர்தலுடன் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. ஏப்ரல் 18-ல் தேர்தல் நடத்த போதிய அவகாசம் இல்லை என்றும், உரிய நேரத்தில் தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்ததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தில் மொத்தம் 21 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் வரும் 18-ந் தேதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாது என்றும் அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிபதி பாப்தே அமர்வு முன் இன்று நடைபெற்றது. அப்போது, தற்போது 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாகவும், ஆனால் ஏப்ரல் 18-ந் தேதி நடத்த போதிய அவகாசம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சூலூர் தொகுதியும் காலியாக உள்ளதால் 4 தொகுதிகளுக்கும் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவதாகவும் ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் திமுக தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தனர். தேர்தலை நடத்துவதாக ஆணையம் தெரிவித்துள்ளதால் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஏதேனும் ஒரு கட்டத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.