ரஜினி காட்டுவது பாபா முத்திரை அல்ல ஆட்டுத்தலை - சரத்குமார் கிண்டல்
ரஜினி காட்டும் முத்திரை பாபா முத்திரை அல்ல, ஆட்டுத் தலை என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள அதன் தலைவர் சரத்குமார் போராட்ட மேடைக்கு சைக்கிளில் வந்தார்.
அப்போது பேசிய சரத்குமார், “ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என கூறிவிட்டு அமெரிக்க சென்றவர் ரஜினி. காவிரி பிரச்சனையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். ரஜினி காட்டும் முத்திரை பாபா முத்திரை அல்ல, ஆட்டுத் தலை” என்றார்
கடந்த டிசம்பர் 31ஆம் தேதியன்று ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். அத்தோடு வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஆனால், கட்சியின் பெயர், சின்னம், கட்சியின் கொள்கைகள் ஆகிய எதையும் அவர் அறிவிக்கவில்லை.
ஆனால், பாபா முத்திரை அவரது பின்னால் இருந்த திரையில் பிரதிபலித்தது. அத்துடன் வெண் தாமரை மலரின் சின்னமும் இருந்தது. இதனால், ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருதினர். கடும் விமர்சனத்திற்கு பிறகு தாமரை அகற்றப்பட்டு வெறும் பாபா முத்திரை மட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.