தமிழகத்தில் கெட்டுப் போன உதவாக்கரைஆட்சி நடக்கிறது - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தமிழகத்தில் கெட்டுப்போன உதவாக்கரை ஆட்சி நடைபெறுகிறது. சட்டம்,ஒழுங்கும் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை வண்டியூரில் திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாதான் நடந்துள்ளது, இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. நாடு முழுவதும் இதுபோல வெறும் அறிவிப்புகளை மட்டுமே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு ஸ்மார்ட் சிட்டி கூட உருவாகும் சூழல் ஏற்படவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மதுரை உட்பட தமிழகத்தின் நகரங்களுக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கும் விடை இல்லை.
வேலைவாய்ப்பு பற்றி கேட்டால் பக்கோடா விற்கலாமே என கேட்கும் மோடி அரசு தான் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது என்றார் மு.க.ஸ்டாலின் .
தமிழகத்தில் கெட்டுப் போன உதவாக்கரை ஆட்சிதான் தற்போது நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு நிலைமையோ மோசமாக உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் சாடினார்.
கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் 15க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மரணம் என்பது மிகப்பெரிய கொடுமை என்றும், தமிழகத்தில் கெட்டுப்போன ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இதுவே சான்று என்றும் அவர் கூறினார்.
ஆறுமுகசாமி ஆணைய விசாரணையின் மூலம், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளிவராது என்றும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த உண்மை வெளிக்கொண்டுவரப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.