சுந்தர் பிச்சை சப்போர்ட் அமெரிக்க ராணுவத்துக்கே - டிரம்ப் பாராட்டு
சீனாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தணிக்கை செய்யப்பட்ட கூகுள் தேடுபொறியை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போதைய சிஇஓவான சுந்தர் பிச்சை அதற்கு முயற்சி எடுத்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. சீனாவின் தணிக்கை விதிகளுக்கு உட்பட்டு சீனாவுக்கென ‘சென்சார் செய்யப்பட்ட’ கூகுள் என்ஜின் அறிமுகப்படுத்தவுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது.
இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை குழுவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜரான சுந்தர் பிச்சை, ``சீனாவில் அறிமுகம் செய்ய திட்டம் எதுவும் இல்லை. அனைவரும் தகவல்களைப் பெற வேண்டும், அனைவரும் அனைத்துத் தகவல்களையும் பெற வேண்டும், இது மனித உரிமை என்ற கொள்கையில் மாற்றமில்லை” என்று தெரிவித்தார். இதனால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் என பேசப்பட்டது. ஆனால் மீண்டும் இந்த பிரச்சனையில் புகைச்சல் கிளம்பி கொண்டே இருந்தது.
அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தரப்பே இந்த முறை குற்றச்சாட்டை முன்வைத்தது. " கூகுள், சீனாவுடன் இணைந்து செயல்படுகிறது. இது சீன ராணுவத்துக்கு மறைமுகமாக உதவும் வகையில் உள்ளது." மேலும் "தொழில்துறை நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து செயல்படும்போது கிடைக்கும் மறைமுக பலன்களைக் கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம்" என்று அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் (Joseph Dunford) குற்றம் சாட்டியிருந்தார். இப்படியான சூழ்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, வெள்ளை மாளிகையில் சுந்தர் பிச்சை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாகத்தான் கூகுள் நிறுவனம் உள்ளதாகவும், சீன ராணுவத்துக்கு அல்ல என்றும் சுந்தர் பிச்சை உறுதியுடன் தெரிவித்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்விஷயத்தில் சுந்தர் பிச்சை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரின் டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.