தைலாபுரம் விருந்தில் என்ன நடந்தது? - ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்
ராமதாஸ் மற்றும் திருமாவளவன் வார்த்தை போரால் வட தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரனை ஆதரித்து நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது ``மதுரையில் இருந்த திருமாவளவனை அழைத்துவந்து அரசியலில் அறிமுகம் செய்தது நான்தான்.
பின்னர் இருவரும் இணைந்து பல்வேறு இயங்கங்களை நடத்தினோம். உங்கள் கட்சியினருக்கு அரசியல் பயிலரங்கம் நடத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்துங்கள் என்றேன். ஆனால் அவர், இளைஞர்களுக்கு வேறு மாதிரி பயிற்சிகொடுத்தது, பிறகுதான் தெரிந்தது. திருமாவளவனுக்கு அரசியல் அடையாளத்தை தாம் தான் கொடுத்ததாகவும், அது தான் செய்த தவறு" என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு தற்போது திருமாவளவன் பதிலளித்து பேசியுள்ளார். அதில், ``சில ஆண்டுகளுக்கு முன்பாக, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் ராமதாஸ் தன் கையால் உணவு பரிமாறினார். உணவருந்திய பிறகு, வரவேற்பறையில் எங்களை அமர வைத்து ஒரு மணிநேரம் பேசினார். அந்த ஒரு மணிநேரமும் திமுக குறித்து தான் ராமதாஸ் பேசினார். திமுக மற்றும் கருணாநிதியால் தான் நாடே குட்டிச்சுவராகி விட்டது எனவும், அனைவரையும் குடிகாரர்களாக்கி விட்டனர் எனவும், ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை ராமதாஸ் சொன்னார். திமுக ஒரு துரோகக் கட்சி, அது அழிந்துபோகக்கூடியது.
ஆகவே, திமுகவில் இருந்து வெளியே வர வேண்டும் எனக் கூறினார். அதை நான் உதாசீனப்படுத்தினேன். அன்றிலிருந்து என்மீது வீண் பழி சுமத்தி, சேற்றை வாரித் தூற்றிவருகிறார்" எனக் கூறியுள்ளார். இருவரின் வார்த்தை போரால் வட தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.