நடிப்பை பற்றி மோடியிடம் கேளுங்கள் - ஜிக்னேஷ் மேவானிக்கு, பிரகாஷ்ராஜ் ஆலோசனை

நடிப்பதற்கான குறிப்புகளை பிரதமர் மோடியிடம் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரகாஷ்ராஜ் கூறியதாக தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

சமீபகாலமாக நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நடந்து முடிந்த குஜராத் தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்திருந்த அவர், “150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது என்னவாயிற்று???” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கர்நாடகா மாநிலம் சிர்சி பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அவர், பாஜகவை தாக்கிப் பேசினார். இதனையடுத்து, பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்சாவை சேர்ந்த வாலிபர்கள், மாட்டு கோமியத்தால் பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை சுத்தம் செய்தனர்.

இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப “தான், பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும், ஹெக்டேவுக்கும், எதிரானவனே தவிர, இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, இந்துக்கள் யார் என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது” என்று பதிலடி கொடுத்தார் பிரகாஷ் ராஜ்,

இந்நிலையில், குஜராத் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.வும், தலித் தலைவராக அறியப்படுபவருமான ஜிக்னேஷ் மேவானி, நடிகர் பிரகாஷ் ராஜுடன் சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஜிக்னேஷ், “பிரகாஷ்ராஜிடம் இருந்து நடிப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு குறிப்புகள் எடுத்துக் கொள்கிறேன் என்றேன். அதற்கு அவர், நம் தேசத்தின் [பிரதமர் மோடி] தலைவரிடம் எடுத்துக் கொள்ளலாம்" என தெரிவித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

More News >>