சீனாவின் முட்டுக்கட்டைக்கு முடிவு - மசூத் அசார் விவகாரத்தில் அதிரடி காட்டிய அமெரிக்கா
இந்தியாவில் நடத்தப்படும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாக இருக்கும் ஜெயிஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயன்றுவருகிறது. ஆனால், சீனாவின் உதவியால் பாகிஸ்தான் இந்த முயற்சியைத் தடை செய்துவருகிறது. சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற விடாமல் ஏற்கனவே இதுவரை மூன்று முறை தடுத்தது. சீனாவின் செயலால் இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும் கடுப்பாகியுள்ளது. இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தேவையான முயற்சியில் அமெரிக்கா மீண்டும் களம் இறங்கியுள்ளது.
மசூத் அசார் மீது நடவடிகை எடுக்கக் கூடிய தீர்மானத்தை நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில்லுக்கு புதன்கிழமை அமெரிக்கா அனுப்பி இருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் இதற்கான நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. 15 நிரந்தர உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற 9 உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. அந்த ஆதரவை பெற்று மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஐநா பாது காப்பு கவுன்சிலில் சீனா தனது எதிர்ப்பை விலக்கிக் கொண்டாலே போதும் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவார். அவரது தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனால் இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.