`அவர் ஒரு குழந்தை அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன் - ராகுலை கலாய்த்த மம்தா
மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 42 தொகுதிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய 4 கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் மம்தாவுடன் நட்புறவு பாராட்டியபோதிலும், மாநிலத்தில் இரு கட்சிகளும் எதிர் துருவங்களாக இருந்து வருகின்றன. மாநில நலன் சார்ந்த விஷயங்களால் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த வாரம் மால்டா நகரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், " பிரதமர் மோடியும், முதல்வர் மம்தா பானர்ஜியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மம்தா பானர்ஜி மாநிலத்தை முன்னேற்றாமல், வளர்ச்சிப்பாதைக்கு செல்லவிடாமல் வைத்துள்ளார் " என்று குற்றம்சாட்டினார்.
மக்களவை தேர்தலுக்காக இருகட்சிகளும் தேசிய அளவில் கைகோர்த்துள்ள நிலையில் இவரது விமர்சனம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மம்தா பானர்ஜி பதில் அளிக்கையில், ``ராகுல் காந்தி சின்ன குழந்தை. அவர் எதையாவது சொல்வார். என்ன நினைக்கிறாரோ, அதையெல்லாம் பேசுவார். அதற்கெல்லாம் எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன்" எனப் பதிலளித்துள்ளார்.