தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சிறுமி....கோவை வழக்கில் திடுக்கிடும் அறிக்கை

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை துடியலூர் அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25-ம் தேதியன்று சிறுமி காணாமல் போனதாக அச்சிறுமியின் பெற்றோர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக கிடந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது சந்தேகம் இருப்பதாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் கூறியுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குற்றவாளியைக் கண்டுபிடிக்கத் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், நான்கு நாள்களாகியும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சிறுமியின் பெற்றோர் சந்தேகப்பட்ட நபர்களிடம் விசாரித்ததில், தங்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். இதனால், ஆதாரங்கள் ஏதும் கிடைக்காமல் போலீஸார் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில், போலீஸ் தரப்பில் ஓர் பிட் நோட்டீஸ் அடிக்கப்பட்டுள்ளது. அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும். மேலும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறுமியின் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவல் அறிக்கை நேற்று வெளியானது. அதில், பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், மேலும் ஒரு தகவல் இன்று வெளியாகியுள்ளது. அதில் சிறுமி, தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டதும், முக்கு மற்றும் வாயில் துணி வைத்து அமுக்கப்பட்டு கழுத்தில் கயிறு போன்ற ஒன்றை வைத்து இறுக்கியுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

More News >>