ஒரே ஆறுதல் யோகிபாபு தான்! நயன்தாரா இப்படி பண்ணலாமா? ஐரா விமர்சனம்
மனிதர்களின் சுயநலத்தால் பாதிக்கப்படும் அப்பாவி பெண், பேயாக மாறி பழிவாங்கும் படலமே ஐரா. இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்க,‘லெட்சுமி’, ‘மா’ உள்ளிட்ட குறும்படங்களால் அறியப்பட்ட சர்ஜூன் இயக்கியிருக்கும் ஐரா படம் ரசிகர்களைப் பயமுறுத்தியதா?
மீடியாவில் வேலை செய்யும் யமுனாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அதை விரும்பாத யமுனா, பொள்ளாச்சியில் இருக்கும் பாட்டி வீட்டுக்குச் செல்கிறாள். தன்னுடைய நிழலையே பார்த்து பயப்படும் யமுனா இதையே காசாக்கினால் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறாள். பேய் செட்டப்பில் பயமுறுத்தும் வீடியோக்களை தயார் செய்து யூடியூப்பில் ரிலீஸ் செய்து வைரலாகிறாள். இந்த நேரத்தில் அவளைச் சுற்றி பல அசம்பாவிதங்கள் நடக்கிறது. க்யூட் நயன்தாராவை, டெரர் பேய் ஒன்று பின் தொடர்கிறது. இந்தக் கதைக்கு நடு நடுவே கலையரசன் சிலரை சந்திக்க முயல்கிறான். அவர்கள் எல்லோரும் அடுக்கடுக்காக மர்ம முறையில் இறந்துபோகிறார்கள். அந்த வரிசையில் யமுனா தான் கடைசி என்று தெரிந்து யமுனாவை தேடுகிறான் கலையரசன். யமுனாவை கொலை செய்ய நினைக்கும் அந்த பவானி யார், அவருக்கும் கலையரசனுக்கும் என்ன தொடர்பு, பவனிக்கு யமுனா என்ன துரோகம் செய்தார் என்ற கேள்விகளுக்கு பதிலாக நீளுகிறது திரைக்கதை.
நயன்தாராவுக்கு படத்தில் இரட்டை வேடம். மார்டன் பெண்ணாக மீடியாவில் பணியாற்றும் யமுனா மற்றும் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட, அதிர்ஷமில்லாத கிராமத்து பெண் பவானி என்கிற இரண்டு கேரக்டரிலும் நடித்திருக்கிறார் நயன்தாரா. இரண்டு வித ரோல்களிலும் நடிப்பிலும், ரியாக்ஷனிலும், வசன உச்சரிப்பிலும் ஸ்கோர் செய்கிறார் நயன்தாரா. பேய்யை கண்டு பயப்படும் இடங்களாகட்டும், மனிதர்களால் புறக்கணிக்கப்படும் இடங்களில் உடைந்து அழும் இடங்களாகட்டும் நயன்தாரா நிறைகிறார். ஆனால் இதுவே படத்துக்கும் பிரச்னையாகும் என்பதை நயன் உணரவில்லை. ஏனெனில் படம் முழுக்க நயன்தாரா மட்டுமே இருக்கிறார். அவர் இன்றி ஒரு காட்சியும் இல்லை என்ற அளவுக்கு வருவதும் நெருடலே.
படத்தின் முதல் பாதி படு வேகம். விறுவிறுவென கதையை நகர்த்தியிருப்பதும், ப்ளூ சட்டை மாறனை கலாய்த்த இடங்களாகட்டும், பயமுறுத்தும் காட்சிகளாகட்டும், கிராமத்தை கழுகு பார்வையில் கொடுத்த இடமாகட்டும் ஓகே ரகம். ஆனால் முதல் பாதிக்கு அப்படியே நேரெதிராக ஆமை வேகத்தில் இழுத்தடிக்கிறது இரண்டாம் பாதி.
படத்துக்கு ஒரே ஆறுதல் யோகிபாபு. நயனுக்கு ரூட்டு போடும் இடமாகட்டும், கலாய்க்கும் இடமாகட்டும் அங்காங்கே ஸ்கோர் செய்கிறார். முதல் பாதியிலேயே அவரை ஊருக்கு பார்சல் கட்டி அனுப்பியும் விடுகிறார்கள். வி மிஸ் யூ யோகி...!
முன்பெல்லாம் பேய் படங்கள் என்றாலே பழிவாங்கும் படலம் தான் இருக்கும். டெரர் லுக்குடன் பழிவாங்க வரும், மந்திர வாதிகளை வைத்து பழிவாங்கும் பேய்களைத் தான் பார்த்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் பேய் மீது இறக்கப்படுவதும், பேய்யை உடலுக்குள் புக அனுமதிப்பதும், புது கலாச்சாரம் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் ரூட் போட்டு கொடுத்தவர் பக்கா மாஸ் ராகவா லாரன்ஸ் என்பதை ரசிகர்கள் மறக்கவேண்டாம். இப்போது நயன்தாராவும் பேய் மீது இறக்கப்படுகிறார். ஏனெனில் க்ளைமேக்ஸ் காட்சிகளில் பேயுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் நயன்.... இதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்....!
மீடியா வேலைக்கு லீவ் போடும் நயன்தாரா, ஏன் யூடியூப் சேனல் துவங்குகிறார், பேய் ஓட்ட வந்த பேஷன் ஆசாமிகள் என்ன செய்தார்கள், நயன்தாராவின் பாட்டியை ஏன் பேய் கொன்றது?, பேயை ஓட்டுனார்களா இல்லையா, சிறு வயது முதலே பலரும் பவானியை ஒதுக்குகிறார்கள். அப்படியென்றால் அனைவரும் ஏன் பவானி கொல்லவில்லை ? என பல கேள்விகளுக்கு படத்தில் விடை இல்லை.
கல்யாணத்துக்கு கிளம்பும் பவானிக்கு பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் வரும். அந்த காட்சிகளில் நம்பிக்கைத் தன்மை இல்லை என்பது படத்தில் பெரிய குறை. லிஃப்டை நிறுத்தாமல் சென்றதெல்லாம் ஒரு குற்றமா? இதற்கெல்லாம் பேய் துரத்துமா என்று கேட்டால், ஆமாம் துரத்தும் என்கிறார் இயக்குநர். படத்தின் ட்விஸ்ட் அந்த லிஃப்ட் சீன். ஆனால் காட்சியை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்பதே உண்மை. நேர்த்தியான ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் மட்டுமே, ஹாரர் படத்திற்கான உணர்வை தருகிறது, அதுவும் நார்மல் ரகமே. மேகதூதம், காரிகா பாடல்களும் சுந்தரமூர்த்தி இசையில் ரசிக்கும் விதம். குறும்பட பாணியிலேயே படத்தின் காட்சிகளை முதிர்ச்சி இல்லாமல் உருவாக்கியிருக்கிறார் சர்ஜூன். மாயா போன்ற படங்களில் நடித்த நயன்தாரா, இப்படியான வலிமை இல்லாத திரைக்கதையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. நயன்தாராவே நினைத்தாலும், ஐரா பேயிடமிருந்து படத்தை யாரும் காப்பாற்றமுடியாது...!