சுயேச்சைகள் தான்...ஆனால் தன்மானம் உள்ளவர்கள் டிடிவி தினகரன் விளாசல்
‘ஆட்சி அதிகாரத்துக்காக யாரிடமும் மண்டியிட மாட்டோம்’ என்று டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையின் போது பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தென் சென்னை தொகுதியில் திமுக சார்பாக தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். தென் சென்னையில் 30 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிடும் பெண் வேட்பாளர் இவர். அதிமுக சார்பில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் மகன் என்ற அடையாளத்துடன் ஜெ.ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.
அதிமுக–திமுக நேரடியாக மோதும் தென் சென்னை தொகுதியில் டிடிவி தலைமையிலான அமமுக சார்பில் முத்தையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இவரை, ஆதரித்துப் பேசிய டிடிவி தினகரன், ‘நாங்கள் சுயேச்சைகள் தான்; தன்மானம் உள்ள சுயேச்சைகள். ஆட்சி அதிகாரத்திற்காக யாரிடமும் மண்டியிடமாட்டோம். எந்த ஒரு சமரசத்திற்கும் செல்ல மாட்டோம் என்பதை அம்மாவின் உண்மையான பிள்ளைகள் என்பதை நாங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம். மத்தியில் அட்சியில் பொறுப்பில் உள்ளவர்களிடம் நாம் சமரசம் செய்துகொண்டால் இன்று ஆட்சி நம் கையில் இருந்திருக்கும்’ என்று பேசினார்.