தினகரனுக்கு கிப்ட் கொடுத்த தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டியை தீயாய் பரப்பிய அமமுகவினர் - இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு பொது சின்னமாக பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது தான் தாமதம் சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் பல வண்ணங்கள் தீட்டி டிசைன், டிசைனாக சின்னத்தை விளம்பரப்படுத்தி விட்டனர் அமமுகவினர் . டிவிட்டரிலும் இந்திய அளவில் பரிசுப் பெட்டி டிரெண்டிங் ஆகியுள்ளது.
தினகரனின் அமமுக புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவை மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி உள்ளிட்ட 19 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுகிறது. ஆர்.கே.இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றிக்கு காரணமான குக்கர் சின்னத்தைக் கேட்டு, போராடிப் பார்த்தும் தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் பெரும் சட்டப் போராட்டம் நடத்தி கடைசியில் அனைத்து தொகுதிகளுக்கும் ஏதேனும் ஒரு பொதுச் சின்னம் ஒதுக்கினால் கூட போதும் என்று ' மன்றாடி வெற்றி பெற்றனர்.
இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பொதுச் சின்னமாக எதை ஒதுக்கப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்புடன் அமமுக காத்திருந்த நிலையில் தான் இன்று விடிந்த பொழுதே பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கிய அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானது தான் தாமதம், அந்த நிமிடம் முதல் அமமுக தொண்டர்களுக்கு ஒரே குஷியாகி விட்டது. கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
36 சின்னங்களைக் காட்டி எது வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டதற்கு பரிசுப் பெட்டியை அடையாளம் காட்டினாராம் தினகரன். கேட்ட சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில், தினகரனுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த கிப்ட் என்று கூறி, பரிசுப் பெட்டி சின்னத்தை பல வண்ணங்கள் தீட்டி டிசைன், டிசைனாக வரைந்து சமூக வலைதளப் பக்கங்களில் தீயாய் பரப்பி வருகின்றனர். ஒரு நாள் போதும் சின்னத்தை விளம்பரப்படுத்த என்று கூறி அமமுக தொழில் றுட்ப அணியினரும் தீவிரமாக களத்தில் இறங்கி விட்டனர். இதனால் சில நிமிடங்களிலேயே டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது பரிசுப் பெட்டி.