பீகாரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

பாட்னா: பீகார் மாநிலத்தில், டிரக்கில் கடத்தி செல்லப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிலோ எடைகொண்ட போதைப் பொருளை அம்மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தியாவில், வெளிநாட்டுகளில் இருந்தும் உள்ளூர்களிலும் சட்ட விரோதமாக போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதேபோல், பீகார் மாநிலத்திலும் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தடுத்து நிறுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் கட்டிஹார் மாவட்டத்தில் சிலர் போதைப் பொருளை டிரக்கில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அம்மாவட்டத்திற்கு விரைந்த போலீசார் ஹஜிபூர் என்ற கிராமத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக சென்ற ஒரு டிரக்கை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தனர். இதில், டிரக்கின் ஓட்டுனர் இருக்கையின் பின்புறத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.இதைதொடர்ந்து, போதைப் பொருளையும், அவர்கள் வைத்திருந்த 36 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் தொடர்பாக ஏழு பேரை கைது செய்தனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு 700 கிலோ எனவும், இதன் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் எனவும் கணக்கிடப்பட்டது.

More News >>