வேட்பாளர் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது - மும்முனைப் போட்டி உறுதி
தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை மற்றும் 19 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. திமுக, அதிமுக கூட்டணிக்கு எதிராக சுயேட்சையாக களம் காணும் தினகரனின் அமமுக களத்தில் கெத்து காட்டுவதால் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
வரும் ஏப்ரல் 18-ந் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் 26-ந்தேதியுடன் முடிவடைந்தது.மொத்தம் தாக்கலான 2105 மனுக்கலில் 868 மனுக்கள் பரிசீலனையின் போது தள்ளுபடி செய்யப் பட்டது. நேற்றும், இன்று மாலை 3 மணி வரையும் வேட்பு மனு வாபஸ் பெறப்படுகிறது.
அதன்பின் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர், சின்னம் அகர வரிசைப்படி இடம் பெறும். அதன் மாநிலக் கட்சிகள், பதிவு பெற்ற கட்சிகளின் சின்னம் இடம்பெறும்.
சுயேட்சை வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் ஒதுக்கப்படும். ஒரே சின்னத்தை இரு சுயேட்சைகள் கேட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். அனைத்து தொகுதிகளிலும் சுயேட்சையாக போட்டியிடும் தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் பொது சின்னமாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம் . இதனால் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கீட்டில் பிரச்னை இருக்காது.
வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வேட்பாளர் பெயர், சின்னங்களுடன் இன்று மாலையே வெளியிடப்படும். இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையான கூட்டணியும் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், சுயேட்சையாக களமிறங்கும் தினகரனின் அமமுகவும் கடும் சவாலுக்கு தயாராகி உள்ளதால் மும்முனைப் போட்டிக்கு தயாராகியுள்ளது தேர்தல் களம் .இத்துடன் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி பலத்தை காட்ட உள்ளனர்.