சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் - சன்ரைசர்ஸ் அணிக்கு 199 ரன்கள் இலக்கு

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 198 ரன்கள் குவித்துள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளுமே முதல் வெற்றியைப் பதிவு செய்யாததால் ஆட்டத்தின் எதிர்ப்பார்ப்பு கூடியிருந்தது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயி்க்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

முன்னதாக ஓப்பனிங் வீரர் ஜோஸ் பட்லர் கைகொடுக்க தவறினாலும் இரண்டாவது விக்கெட்டுக்குக் கைகோத்த ரஹானே - சஞ்சு சாம்சன் ஜோடி ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரைசதம் கடந்ததுடன் பாட்னர்ஷிப்பை 119 ரன்கள் வரை கொண்டு சென்றனர். இருப்பினும் ரஹானே 49 பந்துகளைச் சந்தித்து 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

More News >>