கட்சி பெயரை பயன்படுத்தவில்லையே - பிரதமர் மோடியின் செயலுக்கு விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்
நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, ``இந்தியா இன்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றைச் சுட்டுவீழ்த்தும் `மிஷன் சக்தி' சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இதன்மூலம் அமெரிக்க, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே இந்தச் சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த வெற்றியால் நாட்டின் பாதுகாப்பு பலம் பெறும்" என்று கூறினார்.
மோடி அரசாங்கத்தின் காலம் முடிந்த நிலையில் அவரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்தது. தேர்தல் அறிவித்த பின்பு அதுவும் அரசாங்கத்தின் காலம் முடிந்த பின்பு அவர் இப்படி நாட்டு மக்களிடம் உரையாற்ற வேண்டிய தேவை இல்லை. எனவே இது தேர்தல் விதிமீறல் எனக் கூறப்பட்டது. கூடவே, விண்வெளி சாதனைகள் குறித்த அறிவிப்பை இஸ்ரோ அதிகாரிகள் அறிவிப்பது தான் வழக்கம். இதனை எல்லாம் மீறி தேர்தல் நேரத்தில் இப்படி மோடி பேசியுள்ளார் எனக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
எதிர்க்கட்சிகள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்திருந்தனர். அதேநேரம் இது தேர்தல் விதிமீறல் என தேர்தல் ஆணையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் தனிக்குழு அமைத்து பிரதமரின் உரை ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் தற்போது, `` விண்வெளி சாதனை தொடர்பான பிரதமர் மோடியின் அறிவிப்பில் நடத்தை விதிமீறல் இல்லை.
பிரதமர் தன்னுடைய உரையில் அவர் சார்ந்த கட்சியின் பெயரையோ, வாக்கு சேகரிக்கும் வகையிலோ எதனையும் பேசவில்லை" என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இப்படி ஒரு விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.