துரைமுருகன் வீட்டில் விடியும் வரை நீடித்த வருமான வரி சோதனை - பள்ளி, கல்லூரியிலும் சோதனை தொடர்கிறது

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் நள்ளிரவு முதல் விடிய விடிய நடத்திய சோதனை காலை 9 மணிக்கு நிறைவடைந்த நிலையில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக பொருளாளரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறார். இரு பெருந்தலைகள் போட்டி போடுவதால் தொகுதியல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்த வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளுடன் துரைமுருகனின் வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதம் செய்தனா. ஆனாலும் பிடிவாதமாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தேர்தலில் போட்டியிடுவதால், பணம், பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை குறி வைத்து விடிய, விடிய அதிகாரிகள் வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியும் ஒன்றும் கிடைக்காத நிலையில் காலை 9 மணிக்கு சோதனையை நிறைவு செய்தனர்.

பின்னர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நடத்தி வரும் பள்ளி, கல்லூரிகளிலும் சோதனையை நடத்தி வருவதால் காட்பாடியில் திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோதனை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், வேலூர் தொகுதியில் என் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. வீண்பழி சுமத்தி வெற்றிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே தமிழக அரசும்,மத்திய பாஜக அரசும் சோதனை என்ற பெயரில் அதிகாரிகளை ஏவிவிட்டுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன்? தேர்தல் நேரத்தில் சோதனை நடத்துவதற்கான சரியான காலம் இது இல்லை என்றும் குற்றம் சாட்டிய துரைமுருகன், நான் என்ன பெரிய கார்ப்பரேட் கம்பெனியா நடத்துகிறேன்? என்றவர், வந்தார்கள் சோதனை நடத்தி விட்டு வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளனர். எதற்காக சோதனை நடத்தினோம் என்பதைக் கூட எதுவும் சொல்லாமல் சென்று விட்டனர் என்று தனக்கே உரிய பாணியில் கமெண்டும் அடித்தார்.

More News >>