வீட்டைக் காப்பாற்றாதவர் ....நாட்டை எப்படிக் காப்பாற்றுவார் ...நடிகர் நாசரின் தம்பி குமுறல்

அப்பா, அம்மா, தம்பிகள், தங்கைகள் என தன் சொந்தக் குடும்பத்தினரையே நடுத்தெருவில் விட்டவர் தான் நடிகர் நாசர் என்றும், தன் வீட்டையே காப்பாற்றாதவர், நாட்டை எப்படி காப்பாற்றப் போகிறார் என்று நாசரின் தம்பி ஜவஹர் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குணச்சித்திர வேடமென்றாலும் சரி, வில்லன் வேடமானாலும் சரி நடிப்பில் அசத்தி வருபவர் நாசர். நடிகர் சங்கத்திலும் பல பொறுப்புகள் வகித்த நாசர் தற்போது நடிகர் கமல் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் முக்கியப் பொறுப்பில் உள்ளார். தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் நாசரின் மனைவி கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுகிறார்.

நாசரின் மனைவி கமீலா தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் நாசரின் தம்பி ஜவஹர், .தன் அண்ணன் நாசர் மற்றும் அவர் மனைவி கமீலா நாசர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் ஜவஹரும், அவருடைய தம்பி ஜாகீருடன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து நாசர் மற்றும் அவருடைய மனைவி கமீலா குறித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.அப்போது ஜவஹர் கூறியதாவது:

நான் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர். அருகில் இருக்கும் தம்பி பெயர் ஜாகீர். நான், எனது தம்பி ஜாகீர், அப்பா ,அம்மாவுடன் செங்கல்பட்டில் வசித்து வருகிறோம். நான் 10 வருடம் பிரான்சில் சம்பாதித்த பணத்தில் வீடு கட்டி அதில் வரும் வாடகையில் குடும்பம் நடத்தி வருகிறோம்.

நாசருக்கு திருமணம் ஆனதிலிருந்து அவர் எங்களை கவனிக்கவில்லை. எங்களைச் சந்திக்கக் கூட அவரின் மனைவி கமீலா நாசர் அனுமதிப்பதில்லை. இது குறித்து ஆரம்ப காலத்தில் நடிகர் சிவகுமாரிடம் புகார் செய்தேன். நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்தேன்.

நடிகர் விஷாலை சந்திக்கச் சென்றேன். என்னைச் சந்திக்க மறுத்து விட்டார். அதன் பிறகு மாதம் 25,000 தருவதாகக் கூறி எனது அக்காவிடம் கொடுத்து வந்தார். பஞ்சாயத்து செய்து பணம் வாங்க வேண்டாம் என்று கூறி எனது அம்மா அந்தப் பணத்தை வாங்க மறுத்து விட்டார்.

அண்ணன் நாசர் ஒரு அப்பாவி.நாசரின் மனைவி கமீலா தான் தான் எங்கள் குடும்பத்தை நாசமாக்கி விட்டார். தனது குடும்பத்தைக் கவனிக்காத நாசர் எப்படி நாட்டைக் காப்பாற்றப் போகிறார். நான் இப்போது நினைத் தாலும் பிரான்ஸ் போய் சம்பாரிக்க முடியும். ஆனால் என் அப்பா, அம்மா, தம்பிக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன்.

நான் தற்போது பேட்டி கொடுக்கப் போகிறேன் என்றதும் நிறையப் பேர் வேண்டாம் என்று சமாதானம் பேசினார்கள். இதுவரை எங்களைக் கண்டு கொள்ளாதவர்கள் இப்ப மட்டும் ஏன் வருகிறார்கள் என்று தெரியவில்லை.

நாசர் தனது அம்மாவையும், அப்பாவையும் காப்பாற்றவே இல்லை. இதற்கு கமல் பதில் சொல்ல வேண்டும். இந்தப் பேட்டி வெளியானவுடன் நாசர் என் மீது பல்வேறு புகார்களை கூறுவார். அப்படி அவர் புகார் கூறினால், அதற்கான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது தனிப்பட்ட விஷயங்கள் பலவற்றையும் உங்கள் முன் கூற வேண்டி வரும் என்றார் ஜவஹர் .

More News >>