சிறையில் விதிமுறைகளை மீறுகிறாரா சசிகலா? - நேற்று தினகரனுடன் சந்திப்பு
சசிகலா சிறையில் விதிமுறைகளை மீறியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்தார். சந்திப்பின் போது, பல்வேறு பிரச்சனைகள் குறித்து தினகரன் சசிகலாவிடம் ஆலோசனை நடத்தினார் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, ‘அதிமுக அம்மா’ அணி பெயரை பயன்படுத்த அனுமதி கோரி, தில்லிஉயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் சிறைக்கு சென்றுநேரில் விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி திட்டமிட்டிருப்பது ஆகிய விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சசிகலா சிறையில் விதிமுறைகளை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தண்டனை கைதிகளை பார்வையாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறையே சந்திக்க முடியும் என்ற விதி உள்ளது. ஆனால், அந்த விதியை சசிகலா மீறியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கடந்த 26.4. 2017-இல் விவேக் ஜெயராமனும் அவருடைய மனைவியும் இளவரசியை சந்தித்துள்ளனர். இதை தொடர்ந்து மே 6 2017-இல் கிட்டதட்ட 10 நாட்களில் மீண்டும் இளவரசியை விவேக் சந்தித்துள்ளார்.
அதுபோல் 12.5.2017-இல் சசிகலாவை அவரது வழக்கறிஞர் அசோகன் சந்தித்துள்ளார். பின்னர் 10 நாட்கள் இடைவெளியில் அதாவது மே 22-ஆம் தேதி அசோகன் , சசிகலாவை மீண்டும் சந்தித்துள்ளார்.
மேலும், சசிகலாவை அவரது அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இரு நாட்கள் சந்தித்துள்ளார். அதன் பின்னர் பிப்ரவரி 18, 20, 23, 28, மார்ச் 1-ஆம் தேதி ஆகிய தேதிகளில் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.
ஆனால், இதற்கு தினகரன் மறுப்புத் தெரிவித்துள்ளார். சிறை விதிமுறைகளின் படி நாங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் சந்தித்து வருவதாகவும், இடையில் வழக்கறிஞர்கள் வந்து சந்திக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் இருப்பதும், தனியே சமையலறை இருப்பதும், இதற்காக அவர் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும் சிறைத் துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.