முட்டையில் இருக்கும் சத்துகள் எவை?
புரோட்டீன் என்ற சொல்லை கேட்டதும் நமக்கு நினைவுக்கு வருவது முட்டைதான்.
புரோட்டீன் என்னும் புரதம் மட்டுமல்ல, வைட்டமின்கள் மற்றும் பல நன்மை தரும் தாது சத்துகள் முட்டையில் நிறைந்துள்ளன. ஏனைய சத்து நிறைந்த உணவுகளோடு ஒப்பிடும்போது முட்டை மலிவானது மட்டுமல்ல, எளிதில் கிடைக்கக்கூடியதும் கூட! ஆகவே, ஊட்டச்சத்து என்றாலே நாம் முட்டைக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.
ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்டுகள்: லூடின் (Lutein) மற்றும் ஸீக்ஸ்அந்தின் (Zeaxanthin) போன்ற ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் முட்டையில் உள்ளன. இவை கண்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடியவை. தசை சிதைவு மற்றும் காட்டராக்ட் என்னும் கண் புரை ஆகிய குறைபாடுகள் ஏற்படுவதையும் இவை தடுக்கின்றன.
ஊட்டச்சத்து நிறைந்தது: ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், தாதுகள் மற்றும் ஊட்டச்சத்துகள் முட்டையில் அடங்கியுள்ளன. பாஸ்பரஸ், இரும்பு மற்றும் வைட்டமின் ஏ போன்றவையும் அதிகம் காணப்படுகின்றன. கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு உள்ளது என்று கூறி முட்டையின் மஞ்சள் கருவை தூர எறிந்துவிடாதீர்கள். ஏனெனில் அதில்தான் அதிகம் சத்து உள்ளது.
சர்க்கரை மற்றும் எடை அதிகரிப்பதில்லை: முட்டையில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் அளவு மிகவும் அதிகமல்ல. இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் இது கூட்டுவதில்லை. முட்டையை தொடர்ந்து உண்பது ஆரோக்கியமான பழக்கம். எடை மற்றும் கொழுப்பு சத்து குறைவதற்கு முட்டை உதவுகிறது.
தலைமுடி மற்றும் தோலுக்கு நல்லது: முட்டையிலுள்ள வைட்டமின் பி12 மற்றும் கந்தகம் ஆகிய சத்துகள் சருமம் மற்றும் முடி ஆகியவற்றுக்கு நல்லது. நகம் மற்றும் முடியிலுள்ள கெராட்டின் என்ற புரதத்தை நம் உடல் முட்டையிலிருந்து எடுத்துக்கொள்கிறது.
நல்ல கொலஸ்ட்ரால்: முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புச் சத்தான ஹெச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்டிரால் சேரும். இதன் மூலம் மூளையில் இரத்த அடைப்பு மற்றும் இதய நோய் வராமல் தடுக்க முடியும்.உடலுக்கும் தேவையான ஒன்பது அமினோ அமிலங்களும் முட்டையில் உள்ளன. இவை எல்லாவற்றையும் தவிர முட்டையை அவித்து, பொறித்து, கலக்கி, கிண்டி எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஏனைய உணவுகளோடு சேர்த்து உண்பதற்கும் முட்டை ஏற்றது.