பாவம் கமல்...கூட்டமே சேரலை...பேசாமலே திரும்பினார்
மாற்றத்தை நோக்கி அரசியல் பயணம் புறப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சும் போல் தெரிகிறது. வருகிறார்.. வருகிறார் கமல்... என கூவிக்கூவி அழைத்தும் கூட்டமே சேராததால் வெறுத்துப் போய் பல இடங்களில் பேசாமலே திரும்பினார்.
அரசியலில் லேட்டாக தடம் பதித்த கமல், ஏகப்பட்ட கனவுகளுடன், புதுப்புது ஐடியாக்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து சினிமா பாணியில் வசனம் பேசி, ஹைடெக் பாணியில் அரசியலில் விறுவிறுவென அடுத்தடுத்த கட்டங்களுக்கு கமல் நகர்ந்தார். தேர்தலும் வந்து விட கொத்தாக தனித்துப் போட்டி என்று அறிவித்தார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதி, டாக்டர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்களை வேட்பாளர்களாக அறிவித்து தேர்தல் களத்தில் குதித்தார்.
அடுத்து பிரச்சாரக் களத்திற்கு ஹைடெக் பாணியில் தயாரானார்.நேற்று முன்தினம் மாலையில் தென்சென்னை தொகு தியில் கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை ஒரு கையில் பிடித்தபடி மறுகையில் மைக் பிடித்து வேனில் பிரச்சாரம் தொடங்கினார். முதல் நாள் பிரச்சாரத்திலேயே ஓரளவுக்குத்தான் ரெஸ்பான்ஸ் இருந்தது.
இதனால் நேற்று 2-வது நாள் பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்து விட்டு, கோவையில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும் பத்தினருக்கு ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று கிளம்பி விட்டார்.கோவை சென்றவர், தேர்தலை விட ஆறுதல் முக்கியம் என்றும் காரணம் சொன்னார்.
இன்று காலை மீண்டும் பிரச்சாரத்தை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மேற்கொண்டார். பல்லாவரம், தாம்பரம் ஆகிய இடங்களில் கமல் பேச்சைக் கேட்க சொற்ப அளவிலே, மட்டும் தான் மக்கள் கூடினர். அடுத்து படப்பையில் பேசுவதற்கு சென்ற போது ஒரு சில மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் மட்டுமே இருந்ததால் வேனில் இருந்து கமல் வெளியே வரவில்லை. அடுத்து ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களிலும் இதே போன்று நோ ரெஸ்பான்ஸ் ஆக இருந்ததால் அங்கும் பேசாமலே பயணத்தை பாதியிலேயே ரத்து செய்தார்.
பின்னர் இன்று மாலையில் இடைத்தேர்தல் நடைபெறும் பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் பிரச்சாரத்தை கமல் தொடர்ந்தார். கமல் வருகிறார்... கமல் வருகிறார் என்று நடுரோட்டில் கட்சித் தொண்டர்கள் 50 பேருக்கும் மேல் தொண்டை கிழிய கத்தியும் சொற்ப அளவிலேயே மக்கள் கூட்டம் கூட, அவர்கள் மத்தியில் கமல் பேசிச் சென்றார்.
கனவுகளுடன் அரசியலில் குதித்த கமலுக்கு, உண்மையான தேர்தல் அரசியல் களம் இது தான் என்பது பிரச்சாரம் கிளம்பிய 2-வது நாளிலேயே உணர்த்திவிட்டது. காரணம், கையில் காசு, குவார்ட்டர், பிரியாணி என்று கொடுத்தால் மட்டுமே கூட்டம் சேர்க்க முடியும் என்ற நிலைமையை நம் அரசியல்வாதிகள் எப்போதோ ஏற்படுத்தி விட்டார்கள். இதனால் நேர்மை, கொள்கைகளையெல்லாம் மக்கள் புறந்தள்ளி விட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.