பேருந்தில் செல்வதற்கு பதிலாக அபராதம் கட்டலாம் - விஜயகாந்த் கூறிய வாட்ஸ்ஆப் மெசேஜ்
பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்தால் எழுநூறு ரூபாய் வருகிறது அதற்கு அபராதம் செலுத்திவிடலாம் போல என அனைவரும் பேசிக்கொள்கின்றனர். வாட்ஸ் ஆப்பிலும் இது வேகமாக பரவி வருகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக சார்பில், சென்னை பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துக்கொண்டு பேசினார்.
அப்போது கூறிய அவர், “இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு ஆங்கில பத்திரிகையில் ஒரு செய்தி பார்த்தேன். அந்த செய்தி பற்றி உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன். 75% மக்கள் பேருந்தில் பயணம் செய்வதில்லை என்று அதில் வந்துள்ளது.
பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தால் ஐநூறு ரூபாய் அபராதமாம். பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்தால் எழுநூறு ரூபாய் வருகிறது... ‘அதற்கு அபராதமே செலுத்திவிடலாம் போல...’ என அனைவரும் பேசிக்கொள்கின்றனர். வாட்ஸ் ஆப்பிலும் இது வேகமாக பரவி வருகிறது.
இன்று உங்களுக்காகவே பேருந்தில் நான் வந்தேன் ஆலந்தூரிலிருந்து திரிசூலம் வர 42 ரூபாய் ஒரு நபருக்கு. இது மாதிரி கொடுத்து வந்தால் மக்கள் வேதனை படமாட்டார்களா? இப்ப எவ்வளவு குறைத்துள்ளார்கள் இரண்டு பைசா. ஏன் நீங்களும் லஞ்சமும் ஊழலும் பைசா கணக்கில் வாங்குங்கள் பார்ப்போம்.
அதை மட்டும் கோடிக்கணக்கில் வாங்கிக் கொள்கிறீர்கள். கட்டணம் மட்டும் நிறைய ஏற்றிவிட்டு, குறைக்கும்போது மட்டும் பைசா கணக்கில் குறைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.