நடுவானில் பயணிகளை அதிரவைத்த பார்வர்ட் பிளாக் அமைப்பினர் - மதுரை விமான நிலையத்தில் நிலவிய பரபரப்பு
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக் கோரி நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி முக்குலத்தோர் சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில்கூட மதுரையில் இதற்காக ஒருநாள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பிற்பகல் 12.55 மணிக்கு சென்னையிலிருந்து மதுரை நோக்கி புறப்பட்ட ஏர் இண்டிகோ விமானத்தில் பாரதிய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் நிறுவனர் ஜி.முருகன் தலைமையில் 8 பேர் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது திடீரென எட்டு பேரும் கொடிபிடித்து உள்ளேயே மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என கூறி கோஷம் எழுப்பினர்.
கூடவே உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால் பதட்டமடைந்த விமான ஊழியர்கள், சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு தகவல் தெவித்துள்ளனர். பின்னர் விமானம் மதுரையில் தரையிறங்கியதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய பார்வர்ட் பிளாக் நிறுவனர் ஜி.முருகன், பொருளாளர் ஞானசேகரன், செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.