மோடியை தூக்கிப் பிடிக்காதீங்க....அம்மா புராணம் பாடினாத்தான் ஓட்டு ... எடப்பாடிக்கு உளவுத்துறை அட்வைஸ்
அதிமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் பேச்சுக்கு பேச்சு மோடி புராணம் பாடுவது கட்சியின் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எரிச்சலைக் கொடுக்கிறது. அம்மா புராணம் பாடினால் தான் ஓட்டுக் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடிக்கு உளவுத் துறை அட்வைஸ் செய்துள்ளதாம்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் 17 நாட்கள் தான் இடைவெளி என்பதால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. கட்சிகளின் தலைவர்களும் விறுவிறுவென தேர்தல் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளும் அதிமுக தரப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் மட்டுமே மாநிலம் முழுவதும் முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 18 சட்டசபைக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி அதி முக்கியம் என்பதால் அமைச்சர்கள் அனைவரும் அதில் முழுக் கவனம் செலுத்துகின்றனர்.
இந்நிலையில் அதிமுக வெற்றி வாய்ப்பு குறித்து தமிழக உளவுத் துறை கொடுத்த ரிப்போர்ட் முதல்வர் எடப்பாடியை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாம். பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி முதல் ஒட்டுமொத்த அமைச்சர்களுமே பேச்சுக்குப் பேச்சு பிரதமர் மோடியின் பெயரை உச்சரிப்பதை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ரசிக்கவில்லை. மோடியின் பெயரை உச்சரித்தாலே அருவெறுப்பாகத் தான் பார்க்கின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு மேடை, நான் கருணாநிதியின் மகனாக வந்துள்ளேன் என்று கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார். அது போல் அமமுக தினகரனும் ஜெயலலிதாவின் புகழைக் கூறித்தான் ஓட்டுக் கேட்கிறார். அதிமுக தரப்பிலும் அம்மாவின் புராணம் பாடினால் தான் ஓட்டுக்கள் பெறலாம் என்பது தான் உளவுத்துறை கொடுத்த அட்வைஸாம் .
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள முதல்வர் எடப்பாடியார், இனிமேல் மேடைகளில் மோடியைத் தூக்கிப் பிடிப்பதை குறையுங்கள் என்று அமைச்சர்கள் முதல் அதிமுக பேச்சாளர்கள் வரை அனைவருக்கும் உத்தரவே போட்டு விட்டாராம். இதனால் இனிவரும் வரும் நாட்களில் அதிமுக தரப்பு பிரச்சாரத்தில் அம்மாவின் புராணம் தான் ஓங்கி ஒலிக்கும் என்கிறார்கள்.