லாலு அட்வைஸ் சொன்னதால் காங்கிரசில் இணைகிறேன் - சத்ருகன் சின்கா அறிவிப்பு
லாலு பிரசாத் அட்வைஸ் படி காங்கிரசில் இணைவதாகவும், மூண்டும் பாட்னா தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் நடிகரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்கா அறிவித்துள்ளார்.
பாஜக சார்பில் கடந்த 2009,2014 தேர்தல்களில் பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர் சத்ருகன் சின்கா . சமீப காலமாக பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருந்தார்.கடந்த வாரம் திடீரென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். இதனால் இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தரவில்லை. சத்ருகன் வென்ற பாட்னா தொகுதியை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு ஒதுக்கி விட்டது.
இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக சத்ருகன் சின்கா இன்று அறிவித்துள்ளார்.பாஜகவில் ஜனநாயகம் இல்லை. மோடியும், அமித் ஷாவும் சர்வாதிகாரிகள் போல் செயல்படுகின்றனர். மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா போன்றோர் புறக்கணிக்கப்படுகின்றனர்.
மம்தா, அகிலேஷ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தங்கள் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தனர். லாலு பிரசாத் தான் காங்கிரசில் இணையுமாறு எனக்கு அறிவுரை வழங்கினார். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் பாட்னா தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு இம்முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறேன். கடந்த முறை இதே தொகுதியில் பாஜக சார்பில் நின்றாலும் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றேன். தற்போது காங்கிரசில் தான் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பும், நல்ல தலைமையும் உள்ளது. இம்முறை என்னை எதிர்க்கப் போகும் ரவிசங்கர் பிரசாத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மற்றபடி வெற்றியை நிர்ணயிக்கப்போவது தொகுதி மக்கள் தான் என்ற சத்ருகன் வரும் 6-ந் தேதி காங்கிரசில் இணைகிறார்.