`அஜித் சொன்ன ஒரே ஒரு வார்த்தை - `தல மீட்டிங் குறித்து நெகிழும் ஜிப்ரான்
நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம் என நடிகர் அஜித் கூறியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.
விஸ்வாசம் படத்தை அடுத்து சதுரங்க வேட்டை பட இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார் அஜித். பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். 'நேர்கொண்ட பார்வை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு சென்று நடிகர் அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இது தொடர்பான படத்தை பதிவிட்டு ட்விட்டரில், ``ஒரு உண்மையான அஜீத் ரசிகனின் மனநிலையில் இருக்கிறேன். அஜீத் சாரை பற்றி மற்றவர்கள் என்னவெல்லாம் சொல்வார்களோ அதை காட்டிலும் மேலானவராக இருக்கிறார். பல விஷயங்கள் குறித்து பேசினார். ஆனால் ஒரே ஒரு வார்த்தை என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ‘'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என்பதே அது. நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.
வாகைச்சூடவா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல விருதுகளையும், பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் ஜிப்ரான். இவர் கமல் நடிப்பில் வெளியான உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார். மேலும் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றும் பலரால் அழைக்கப்பட்டு வருகிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்கு ஜிப்ரான் தான் இசையமைப்பாளர். தற்போது அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கி வருகிறார் ஹெச்.வினோத். ஆனால், அப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.