போதையில் விபத்து ஏற்படுத்திய இலங்கை கேப்டன் - கைது செய்த காவல்துறை

குடிபோதையில் கார் ஒட்டியதாக இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே (30 வயது). சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் இவரின் சிறப்பான ஆட்டம் கைகொடுக்க, இலங்கை அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. இதனால் வரவுள்ள உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கு இவரை கேப்டனாக நியமிக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கருணாரத்னே இன்று அதிகாலை 5.15 மணியளவில் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கின்சி சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். வெரல்லா பகுதியில் வந்தபோது, ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து ஏற்படுத்திய கருணாரத்னே மது போதையில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள இலங்கைக் கிரிக்கெட் வாரியம், ``கருணாரத்னே விவகாரத்தில் சட்டரீதியான விசாரணை நடந்து வருகிறது. இதில் கிரிக்கெட் வாரியமும் கவனம் செலுத்தும். தவறு செய்தால் அவர் மீது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை பாயும்" எனக் கூறியுள்ளது.

More News >>