என்னவென்று சொல்வது... படுமோசமான தோல்வி இது.... வார்னர் ஆட்டத்தால் விரக்தியின் உச்சிக்கு சென்ற கோலி
விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே தோல்வியை சந்தித்து வரும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்தப் போட்டியை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பம் முதல் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஹைதராபாத் அணியின் ஒப்பனர்கள் முதல் 10 ஓவர்களிலேயே தகர்த்தனர். முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழக்கம் போல வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி துவக்கம் தந்தது. வழக்கம் போல இருவரும் ஓப்பனிங் இறங்கினாலும் வழக்கத்துக்கு மாறான அதிரடியில் கலக்கினர். முதல் ஓவரில் இருந்து பெங்களூரு பௌலர்களின் பந்துவீச்சை இருவரும் அடித்து துவைத்தனர். பாஸ்ட் பவுலிங், ஸ்பின்னர்கள் இந்தப் பௌலர்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.
17வது ஓவரில் இந்த ஜோடியை பிரிக்க முடிந்தது. 28 பந்துகளில் முதல் அரைசதத்தைப் பதிவு செய்த பேர்ஸ்டோவ் 52 பந்துகளில் ஐபிஎல்லில் தனது கன்னி சதத்தை பதிவு செய்தார். 56 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 185 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்டின் அதிகபட்ச பாட்னர்ஷிப் என்ற சாதனையை இன்று இருவரும் படைத்தனர். அவர் போனால் என்ன நான் இருக்கிறேன் என பேர்ஸ்டோவ் அவுட் ஆன பிறகு வார்னரும் தன் பங்குக்கு கடைசி ஓவரில் சதம் அடித்தார். வார்னர் (100 அவுட் இல்லை), பேர்ஸ்டோவ் (114) ஆகியோரின் சதங்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது ஹைதராபாத் அணி.
இமாலய இலக்கை எதிர்கொண்ட பெங்களூரு அணியை பவர் ப்ளேவிலேயே காலி செய்தார் ஆப்கன் பௌலர் முகமது நபி. பார்த்திவ் படேல், ஹெட்மெயர், டிவிலியர்ஸ் என முதல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் அவர். கேப்டன் கோலியை தன் பங்குக்கு சந்தீப் ஷர்மா வெளியேற்ற பெங்களூரூ அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் 19.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு பெங்களூரு அணி ஆல் அவுட் ஆனது. இதனால், 118 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. முகமது நபி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பெங்களூரு அணி தரப்பில் கிராண்ட் ஹோம் 37 ரன்கள் எடுத்தார்.
போட்டிக்கு பிறகு பேசிய பெங்களூரு கேப்டன் விராட் கோலி, ``இதுதான் எங்கள் அணியின் படுமோசமான தோல்வியாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னவென்று சொல்வது, விளக்குவது கடினம். ஒவ்வொரு துறையிலும் சன் ரைசர்ஸ் என்ற தரமான அணி எங்களை வீழ்த்தி விட்டது. முன்னாள் சாம்பியன்கள் என்பதை நிரூபித்து விட்டனர்" என விரக்தியாக கூறியுள்ளார்.