காட்பாடியில் திமுக பிரமுகரின் சிமிண்ட் குடோனில் ரூ10 கோடி பிடிபட்டது - வருமான வரித்துறையினர் மீண்டும் அதிரடி
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், இன்று காட்பாடியில் திமுக பிரமுகர் ஒருவரின் சிமென்ட் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ 10 கோடி பணம் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கடந்த 29-ந் தேதி நள்ளிரவு காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விடிய விடிய திடீர் சோதனை நடத்தினர்.
மறுநாள் துரைமுருகன் குடும்பத்தினருக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை நீடித்தது. கடைசியில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சோதனை குறித்து துரைமுருகன் கடுமையாக விமர்சித்தும் , கிண்டல் செய்தும் பேட்டி கொடுத்திருந்தார். தன் மகன் கதிர் ஆனந்தின் வெற்றியைத் தடுக்க வே அபாண்டமாக பழி சுமத்தப் பார்க்கிறார்கள் என்றும், நான் பனங்காட்டு நரி, இது போன்ற சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டேன் என்றும் துரைமுருகன் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை காட்பாடியில் உள்ள பள்ளிக்குப்பம் பகுதி திமுக செயலாளர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சகிதம் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சிமென்ட் குடோனில், சாக்குப்பைகள், அட்டைப் பெட்டிகளில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ 10 கோடி வரையிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தனித்தனியாக பகுதிவாரியாக பெயர்கள், எவ்வளவு என எழுதி தனித்தனி பண்டல்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ 10 கோடி பணம் யாருக்கு சொந்தமானது? என்று வருமான வரித்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தப் பணம் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க, அவருடைய கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாம். இந்த தகவல் அறிந்து தான் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது என்றும், அப்போது அவசர, அவசரமாக கல்லூரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாயை சீனிவாசனின் சிமெண்ட் குடோனுக்கு அப்புறப்படுத்தி விட்டனராம்.
இந்த தகவல் மீண்டும் கிடைத்து 10 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சிக்கல் எழலாம் என்றும் கூறப்படுகிறது.