முட்டாள் தினத்திற்கு கூகுளின் பரிசு
ஏப்ரல் 1ம் தேதி முட்டாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு கூகுள் மேப் செயலியில் சிறப்பு விளையாட்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம் இதில் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1997ம் ஆண்டு நோக்கியா 6110 போனில் அறிமுகம் செய்யப்பட்ட விளையாட்டு 'பாம்பு' (Snake). அதை மறுவுருவாக்கம் செய்து கூகுள், தனது கூகுள் மேப் செயலியில் தந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு தளங்களிலும் இது கிடைக்கும். ஸ்மார்ட்போன் மற்றும் கணினி (டெஸ்க்டாப்) இரண்டிலும் இதை விளையாடலாம்.
'பாம்பு' (Snake) விளையாட்டின் மறுவுருவாக்கமான இதில் பாம்பு இல்லை. மாறாக டோக்கியோ நகர புல்லட் ரயில், சான் ஃபிரான்சிஸ்கோ நகர் கேபிள் கார், லண்டன் நகர மாடி பேருந்து போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் இருக்கும். கெய்ரோ (எகிப்து), சா பாலோ (பிரேசில்), லண்டன் (இங்கிலாந்து), சிட்னி (ஆஸ்திரேலியா), சான் ஃபிரான்சிஸ்கோ (அமெரிக்கா) மற்றும் டோக்கியோ (ஜப்பான்) ஆகிய நகரங்களுள் ஏதேனும் ஒன்றினை தெரிவு செய்து விளையாடலாம். 'உலகம்' என்ற தெரிவும் உள்ளது. அதை தேர்ந்தெடுத்தால் வரைபடம் முழுவதிலுமிருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம்.
கூகுள் மேப் செயலியின் தேடுதல்பட்டியின் (search bar) இடப்பக்கம் உள்ள பக்கப்பட்டியை (sidebar option) தொட்டால், Play Snake (பாம்பு விளையாட்டு) என்ற தெரிவை பார்க்கலாம்.
பழைய விளையாட்டின் புதிய வடிவை ஒரு கை பாருங்க!