ரூ 10 கோடி பிடிபட்ட விவகாரம் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தா...தமிழக தேர்தல் அதிகாரி சூசக தகவல்
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரின் சிமென்ட் குடோனில் ரூ 10 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? ரத்தாகுமா? என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பிரகர் சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறையினரால் ரூ.10 கோடி பணம் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. தனித்தனியாக பெயர் எழுதி பார்சல்களாக சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகளில் பதுக்கப்பட்டிருந்ததை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தப் பணம் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் மக்களவைத் தொகுதியில் கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு பார்சலிலும் ஊர் பெயர் குறிப்பிடப் பட்டிருந்ததால் இது துரைமுருகன் தரப்புக்கு சொந்தமான பணம் தான் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்தப் பணம் பதுக்கப்பட்ட ரகசியத் தகவல் கிடைத்தே வருமான வரித்துறையினர் பொறி வைத்து பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் பேரில் வேலூர் மக்களவைத் தொகுதி மற்றும் சோளிங்கர், குடியாத்தம் ஆகிய இரு சட்டப் பேரவைகளுக்கான இடைத்தேர்தல்களும் ரத்து செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ரூ 10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், பணம் பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறையினர் கொடுக்கும் அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம். இறுதி முடிவையும் தலைமை தேர்தல் ஆணையமே எடுக்கும் என்று சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.