காங்கிரஸ் கட்சியின் 687 ஃபேஸ்புக் பக்கங்கள் அதிரடியாக நீக்கம் -மக்களவை தேர்தல் எதிரொலி
காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பான 687 ஃபேஸ்புக் பக்கங்கள் நீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்க உள்ளது. காங்கிரஸ், பாஜகவின் தலைவர்கள் சூறாவளி உறுப்பயணம் மேற்கொண்டு, தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி, சமூக வலைதளங்களில் போலியாக உருவாக்கப்பட்ட பக்கங்கள் மூலம் பரவும் அரசியில் தொடர்பான செய்திகளைத் தடுக்க ட்விட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு புதிய கட்டுபாடுகளை சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டது. அரசியல் ஆதாயங்களுக்காக ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் மீறி பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவின் கீழ் தொடங்கப்பட்ட 687 பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கை அதிகாரி கூறுகையில், ‘ஃபேஸ்புக் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்ட பக்கங்கள் போலிக் கணக்குகள் பல இணைந்து உள்ளது. மேலும், நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது. அதனால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்றார்.