ஆரூரா, தியாகேசா சரண கோஷங்களுடன் திருவாரூரில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்

திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பிரசித்திபெற்ற ஆழித் தேரோட்டம் இன்று நடைபெற்றது.  ‘ஆரூரா,  தியாகேசா’   என சரண கோஷங்களுடன் முழங்கியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இக்கோயில் சைவ சமய தலைமைப் பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது.  அப்பர்,  சுந்தரர்,  மாணிக்கவாசகர்,  திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற பிரசித்தி பெற்ற திருத்தலம். பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித் தேரோட்டம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

தியாகராஜர் திருக்கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு தியாகேசருக்கும் அம்பாளுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், ஆலயத்தில் இருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட உற்சவர் சிலைகள் தேரில் எழுந்தருளப்பட்டது. பின்னர், ‘ஆரூரா,  தியாகேசா’  என்ற சரண கோஷங்களை எழுப்பிய பக்தர்கள் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

மாடவீதிகளில் ஆடி அசைந்து வரும் அழித் தேரைக் காணப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் குவிந்தனர்.  300 டன் எடை கொண்ட ஆழித் தேர், ஆசியாவிலேயே  மிகப் பெரியது என்பதால், தமிழகத்தின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாகத் திருவாரூர் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

More News >>