பாகிஸ்தானுக்கு மரண அடி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - உலகக்கோப்பை இறுதியில் இந்திய அணி

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 272 ரன்கள் எடுத்தது.

கேப்டன் ப்ரித்திவ் ஷா, மஞ்சோட் கல்ரா இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்தனர். பின்னர், ப்ரித்திவ் ஷா 41 ரன்களிலும், மஞ்சோட் கல்ரா 47 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் ஹர்விக் தேசாய் 20, ரியன் பராக் 2, அபிஷேக் ஷர்மா 5 என அடுத்தடுத்து வெளியேறினார்.

ஷுப்மன் கில் சதத்தால் தப்பிய இந்தியா:

இதனால், இந்திய 166 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், மறுபுறம் ஷுப்மன் கில் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார். அவருடன் அனுகுல் ஷர்மா இணைந்து விக்கெட்டை மேற்கொண்டு விழாமல் பார்த்துக் கொண்டார். பின்னர் அனுகுல் சர்மா 33 ரன்களில் முஹமது முசா பந்து வீச்சில் வெளியேறினார்.

இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். பின்னர் வரிசையாக விக்கெட்டுகள் விழுந்த போதும் அபாரமாக ஆடிய ஷுப்மன் கில் சதம் விளாசினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஷுப்மன் கில் 94 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் வீழ்ச்சி:

அதன் பின்னர் பாகிஸ்தான் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி 29.3 ஓவர்களில் 69 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியில் அதிகப்பட்சமாக ரொஹைல் நசிர் 18 ரன்களும், சாட் கான் 15 ரன்களும், முஹமது முசா 11 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் எவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வீரர்கள் வருவதும், போவதுமாக அணிவகுப்பு நடத்தினார்கள்.

இதனால், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அற்புதமாக பந்துவீசிய இஷான் பொரேல் 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.

More News >>