பொள்ளாச்சி சம்பவம்சிபிசிஐடி போலீசார் மிரட்டினர் - நக்கீரன் கோபால் பகீர் குற்றச்சாட்டு
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து செய்தி, வீடியோ வெளியிட்டதற்காக விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி போலீசார் தம்மை மிரட்டியதாக நக்கீரன் ஆசிரியர் கோபால் குற்றம் சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல் புள்ளிகள் குறித்து நக்கீரன் ஆசிரியர் கோபால், தாம் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.பொள்ளாச்சி கொடூரங்கள் விவகாரம் வெளிச்சத்துக்கு வர நக்கீரன் கோபால் வெளியிட்ட இந்த பரபரப்பு வீடியோவும் ஒரு காரணம்.
இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இரு முறை சம்மன் அனுப்பியும் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜராகவில்லை. தாம் சென்னையில் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி கொடுத்த நிலையில், இன்று மாலை சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜரானார்.
சுமார் 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் வெளியில் வந்த நக்கீரன் கோபால், சிபிசிஐடி போலீசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். விசாரணை என்ற பெயரில் என்னை குற்றவாளி போல் நடத்தினர். ஆதாரங்களைக் கேட்டு சிபிசிஐடி டிஎஸ்பி என்னை மிரட்டினார். சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த போது போலீசாரும் சேர்ந்து மிரட்டல் விடுத்தனர் என்று செய்தியாளர்களிடம் நக்கீரன் கோபால் தெரிவித்தார்.