வெற்றி பெற முடியாதவர்கள் போடுகிற தப்புக்கணக்கு - துரைமுருகன் கல கல
வருமான வரி சோதனை என்பது வெற்றி பெற முடியாதவர்கள் போடுகிற தப்புக் கணக்கு. என்னைக் குறி வைத்தால் ஒட்டுமொத்த திமுகவினரை அச்சுறுத்தலாம் என்று மத்திய, மாநில அரசுகள் எண்ணுவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நெருங்கிய நண்பரும், திமுக பிரமுகருமான சீனிவாசனை குறிவைத்து வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சீனிவாசனின் சிமெண்ட் குடோனிலிருந்து ரூ.10 கோடி அளவுக்கு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பணம் வேலூர் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக தனித்தனி கவர்களில் போடப்பட்டு இருந்ததாகவும், இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற அளவுக்கு சர்ச்சையாகிக் கிடக்கிறது.
இந்நிலையில் இன்று மாலை மீண்டும் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியது திமுக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வந்த சிறிது நேரத்தில் வருமான வரி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
பின்னர் வீட்டின் முன் திரண்டிருந்த திமுக தொண்டர்களுடன் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிகாரிகள் திடீரென வந்தார்கள்... ஏதோ கேட்டார்கள்... சரி என்று சென்று விட்டார்கள் என்று துரைமுருகன் கிண்டலாக கூறினார். மேலும், வேலூரில் என் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று விடக் கூடாது என்று இடையூறு செய்வதற்காகவே இந்த சோதனை நடத்துகிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க அரசியல் தான் காரணம். வெற்றி பெற முடியாதவர்கள் போடுகிற தப்புக்கணக்கு .இதன் பின்னணியில் மத்திய, மாநில அரசுகளும் தான் உள்ளன என்று துரைமுருகன் தெரிவித்தார்.