டெல்லியை சுருட்டிய இளம் புயல் சாம் குர்ரான் - மூன்றாவது வெற்றியை ருசித்த பஞ்சாப் அணி
டெல்லி அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மொகாலியில் நடைபெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கேஎல் ராகுலுடன் சாம் குர்ரான் ஓப்பனிங் வீரராக களம்புகுந்தார். முதல் ஓவரை அதிரடியுடன் துவக்கிய கேஎல் ராகுல் 11 ரன்களுடன் 2வது ஓவரிலேயே வெளியேற, 20 ரன்களில் நான்காவது ஓவரிலேயே சாம் குர்ரான் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த மாயங் அகர்வால் கைகொடுக்க தவறினாலும், சர்ப்ராஸ் கான் - டேவிட் மில்லர் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களின் அதிரடி உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு வழக்கம் போல் தவான் - பிரிதிவி ஷா ஓப்பனிங் கொடுத்தனர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரிதிவி ஷா இந்த முறை முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதன் பின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் - தவான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 28 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் வெளியேற சிறிது நேரத்தில் தவானும் வெளியேறினார். பின்னர் ரிஷப் பான்ட், இங்கிராம் இணை அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் மும்மரம் காட்டியது. இதில் பான்ட் 39 ரன்கள் எடுத்தும் இங்கிராம் 38 ரன்கள் எடுத்தது அவுட் ஆகினர். பின்னர் வந்த வீரர்களில் யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக ஆடவில்லை. இதனால் 19.2 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி பறிகொடுத்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக பந்துவீசிய இளம் வீரர் சாம் குர்ரான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். அவர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.