மோடி படத்துக்கு தடை விதிக்க முடியாது- டெல்லி உயர் நீதிமன்றம்
பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து பி.எம். நரேந்திரமோடி என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் ஓமங் குமார் இயக்கி உள்ளார். இந்த படம் முதலில் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், பி.எம்.நரேந்திரமோடி படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்ததால் முன்கூட்டியே வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. அதனால் வருகின்ற 5ம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது. இதற்கிடையே தேர்தல் சமயத்தில் இது போன்ற படங்களை எடுப்பது, வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்று காங்கிரஸ் கட்சி உள்பட பலர் படத்தை வெளியிடுவதற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பி.எம். நரேந்திரமோடி படத்துக்கு எதிரான வழக்குகளை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் அந்த படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று அதிரடியாக தீர்ப்பளித்தது. இதனால் படம் திட்டமிட்டப்படி வரும் 5ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகி உள்ளது.