தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகை - 2 நாள் முக்கிய ஆலோசனை

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்.மக்களவை மற்றும் இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்றும் நாளையும் பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிக்கும், 18 சட்டப்பேரவைகளுக்கு இடைத்தேர்தலும் வரும் 18-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் இடைவெளி உள்ள நிலையில் அதற்கான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில்,தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார். இன்று மாலை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகளைச் சந்தித்து கருத்துக்களை கேட்டறிகிறார்.

அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், திமுக பொருளாளர் துரைமுருகன் உறவினருக்கு சொந்தமான இடங்களில் 11 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. .

இந்த விவகாரத்தின் எதிரொலியாக அதிகபட்சமாக வேலூர் மக்களவைத் தேர்தலை, நிறுத்தி வைக்கப்படலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஏற்கனவே கூறியிருந்தார். எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, நாளை காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டம் முடிந்த பின்பு, பிற்பகலில் தலைமைச் செயலர், டி.ஜி.பி., வருமான வரித்துறை, கலால் துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மேலும், நாளை மாலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விளக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>