நம்பிக்கை இல்லாத இஸ்லாமியர்கள் பா.ஜ.க மூத்த தலைவர் சர்ச்சைப் பேச்சு

இஸ்லாமியர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இல்லாததால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில் கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா இவ்வாறு பேசியுள்ளார். கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த போது ஈஸ்வரப்பா துணை முதலமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கர்நாடகாவின் வடக்கு கோப்பால் நகரில் பேசிய அவர், இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துவதாக கூறினார். பா.ஜ.க மீது இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் கர்நாடகாவில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் ஈஸ்வரப்பாவின் இந்த மதவாத பேச்சு பா.ஜ.க வை பாதிக்கும் என்றே நம்பப்படுகிறது. சர்ச்சைகளுக்கு புகழ் பெற்ற ஈஸ்வரப்பா கடந்த ஆண்டு, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படும் இஸ்லாமியர்கள் கொலைகாரர்கள் என்றும், பா.ஜ.கவுடன் பணியாற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமே நல்லவர்கள் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

More News >>