கொள்கையாவது ... கத்தரிக்காயாவது....தனிநபர் விமர்சனத்தில் தூள் கிளப்பும் எடப்பாடி, மு.க.ஸ்டாலின்
கொள்கை, கோட்பாடுகளைக் கூறி பிரச்சாரம் செய்த காலம் போய் தலைவர்களின் தனிநபர் விமர்சனங்களால் அதிர்ந்து போய்க் கிடக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம்.அதிலும் சமீப நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு என்பது போல் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருவது காண்போருக்கும், கேட்போருக்கும் பொழுது போக்காகி விட்டது.
அரசியல் கட்சி என்றால் கொள்கை என்ன? கோட்பாடு என்ன? என்ற கேள்வி தான் மக்களிடம் எழும். அதற்கேற்றாற்போல் தான் கட்சிகளும் கொள்கை பிரகடனம் செய்வார்கள். அதே போல் கொள்கைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதும் வழக்கம். ஆனால் சமீப காலமாக கொள்கையாவது?கத்தரிக்காயாவது ? என்ற ரீதியில் போய்விட்டது தமிழக அரசியல். ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறினால் அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன காலம் போய், நீ என்ன யோக்கியம் என்ற ரீதியில் இப்போது தனிநபர் விமர்சனங்கள் தூள் பறக்கிறது.
அதிலும் தமிழக முதல்வர் எடப்பாடியும், மு.க.ஸ்டாலினும் சமீப நாட்களாக சரவெடியாக ஒருவருக்கொருவர் ஆவேசத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி அரசு கொள்ளைக்கார அரசு என்கிறார் மு.க.ஸ்டாலின். எடப்பாடியோ, கொள்ளையைப் பற்றிப் பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன அருகதை என்று பழைய ஊழல் கதைகளைக் கூறி போட்டுத் தாக்குகிறார். கோடநாடு கொலைகள், கொள்ளைகளை குறிப்பிட்டு கொலைகார அரசு என்று எடப்பாடியைக் குறிப்பிட்டால், சாதிக் பாட்ஷா மர்ம மரணத்தில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்கிறார் எடப்பாடி .
எடப்பாடி ஒரு மண் புழு என்று ஸ்டாலின் விமர்சிக்க எடப்பாடி போட்டாரே ஒரு போடு... ஆமா நான் ஒரு மண்புழு தான்.. நான் ஒரு விவசாயி... விவசாயிக்குத் தான் தெரியும் மண்புழுவின் அருமை . விவசாயியின் நண்பன் தான் மண்புழு .ஆனால் ஸ்டாலினோ ஒரு வைரஸ் கிருமி போன்றவர் ... வைரஸ் கிருமி அழிக்கப்பட வேண்டியது என்று விமர்சனத்தின் உச்சிக்கே சென்று விட்டார் எடப்பாடி . இப்படியாக இன்னும் 15 நாட்களுக்கு இருவரும் என்னென்ன வாணவேடிக்கை காட்டப் போகிறார்களோ தெரியவில்லை.
இது போன்றுதான் டாக்டர் ராமதாஸ், வைகோ, பிரேமலதா,சீமான் உள்ளிட்ட தலைவர்களாகட்டும், பிற அமைச்சர்களாகட்டும், தொகுதிகளில் போட்டியிடும் எதிரெதிர் வேட்பாளர்களாகட்டும் எல்லோருமே தனிநபர் தாக்குதலில் தான் தீவிரம் காட்டுகின்றனர்.
இதில் விதிவிலக்காக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களைப் பார்க்க முடிகிறது. தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும், கூட்டம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எளிமையாக சிறு மேடை போட்டு கொள்கை முழக்கமிடுவதை ஓரளவுக்கு பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் நம்மவர் கமலையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.