இந்துக்கள் தீவிரவாதிகள் அல்ல - மோடி பேச்சு நாதுராம் கோட்சே யார் என எதிர்ப்பாளர்கள் கேள்வி
இந்துக்கள் தீவிரவாதிகள் அல்ல என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு அவரது எதிர்பாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். நாதுராம் கோட்சே யார் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மஹாராஸ்டிர மாநிலம் வார்தாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, கேரளாவின் வயநாடு மற்றும் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவது ஏன் என்று வினவினார். இந்துக்கள் மீது கொண்ட பயத்தால், சிறுபான்மையினர் நிறைந்த பாதுகாப்பான தொகுதியை ராகுல்காந்தி தேர்ந்தெடுத்து இருப்பதாக அவர் கூறினார்.
இந்துக்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புவர்கள் என்றும், வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப்பார்த்தால் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டு இருக்கமாட்டான் என்றும் மோடி திட்டவட்டமாக கூறினார்.
இதற்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள மோடி எதிர்ப்பாளர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சேவின் புகைப்படத்தை பதிவிட்டு, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற இவர் யார் என்று தெரிகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர் . தேர்தல் பரப்புரையின் போது அரசியல் தலைவர்கள் பேச்சுகளின் உண்மைதன்மையை சோதிக்கும் வலைத்தளவாசிகள் அதற்கு ஆதாரப்பூர்வமாக பதிலளித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் பேச்சும் அவர்களுக்கு விதிவிலக்காக அமையவில்லை.