மீண்டும் மோடி பிரதமர் என்ற ராஜஸ்தான் ஆளுநர் பதவி தப்புமா..? நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை
தேர்தல் நடத்தை விதிகளை மீறி,பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என்று கருத்து தெரிவித்த ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கல்யாண் சிங், உத்தரப் பிரதேச மாநில முதல்வராகவும் இருந்தவர். தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநராக உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கல்யாண் சிங்,பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. கல்யாண் சிங்,ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக தேர்தல் ஆணையத்திலும் எதிர்க்கட்சிகள் புகார் செய்தன.
இந்தப் புகார்கள் மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஆளுநர் கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளது. நடுநிலையாக செயல்பட வேண்டிய ஆளுநர், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறியிருப்பது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் கடிதத்தில் தெரிவித்துள்ளது. இதனால் கல்யாண் சிங்கின் ஆளுநர் பதவி பறிபோகும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.