ரஜினியின் முள்ளும் மலரும் படத்துக்கு புரோடக்ஷன் மேனேஜர் அளவுக்கு வேலை பார்த்தேன் நினைவுகளை பகிரும் கமல்
மறைந்த மகேந்திரனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
'முள்ளும் மலரும்', 'ஜானி' போன்ற சிறந்த திரை படைப்புகளை கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79.
மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில், `` நான் பார்த்து வியந்த திறமையாளர்களில் ஒருவர் மகேந்திரன். எனது ஊருக்கு பக்கத்து ஊர் காரர். அதனால் எனக்கு இன்னும் நெருக்கம். முள்ளும் மலரும் படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது. நான் தான் ரஜினி, மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகியோரை கையை கோர்க்க வைத்து வெற்றிப் படங்கள் எடுங்கள் என வாழ்த்தினேன். கிட்டத்தட்ட புரோடக்ஷன் மேனேஜர் அளவுக்கு அந்த படத்திற்காக வேலை பார்த்தேன். ஏனென்றால், படம் அற்புதமான படம் என்று எனக்குத் தெரியும். எந்தவொரு காரணத்தைக் கொண்டும் நின்றுவிடக்கூடாது என்று நாங்கள் அனைவரும் சேர்த்து வெளிக்கொண்டு வந்த படம்தான் 'முள்ளும் மலரும்'. அது என் மனதில் பசுமையாக இருக்கிறது. மகேந்திரனை பார்த்து தான் நிறைய இளைஞர்கள் சினிமா எடுக்க கிளம்பி வந்தனர். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.